2–வது முறையாக ஆம் ஆத்மி பெண் மந்திரி பாதுகாப்பை நிராகரித்தார்
புதுடெல்லி, ஜன. 12–
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதில் பெண் மந்திரியாக இருப்பவர் ராக்கிபிர்லா. 26 வயதான அவர் குழந்தைகள் மேம்பாட்டு துறை இலாகாவை கவனித்து வருகிறார்.
கடந்த 5–ந்தேதி இவரது கார் மீது கல் வீசப்பட்டது, இதில் அவர் காயம் எதுவுமின்றி தப்பினார். இது தொடர்பாக பங்கலாபுரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் அந்த புகாரை வாபஸ் பெற்றார்.
பெண் மந்திரி ராக்கி பிர்லாவுக்கு போலீசார் ஏற்கனவே பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர். அவர் அதை நிராகரித்து விட்டார்.
கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக அவருக்கு போலீசார் கடிதம் எழுதினர்.
ஆனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறி அவர் மீண்டும் நிராகரித்து விட்டார். தான் நல்ல பாதுகாப்புடன்தான் இருப்பதாக அவர் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ரோடு மற்றும் பல்வேறு இடங்களில் செல்லும் பெண்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source maalaimalar