கெஜ்ரிவாலை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்: நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தீவிரம்
புதுடெல்லி ஜன 27–
காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவரது மந்திரி சபையில் 6 மந்திரிகள் இடம் பெற்று உள்ளனர். மந்திரி பதவி கிடைக்காததால் அந்த கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சமீபத்தில் அவர் கட்சிக்கு எதிராகவும், கெஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக கூறி பின்னியை ஆம் ஆத்மி கட்சி நேற்று அதிரடியாக நீக்கியது. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும் மன்னிப்பு கேட்டால் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்றும் அந்த கட்சியின் தலைவர் இலியாஸ் ஆஸ்மி தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
கட்சியில் இருந்து என்னை நீக்கியது துரதிருஷ்டவசமானது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் பலர் கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். மக்கள் நல திட்டங்களை கைவிட்டு விட்டு மாற்று பாதையில் ஆம் ஆத்மி செல்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மக்களுக்காக தொடர்ந்து போராடுவதே எனக்கு முக்கியம்.
டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா என்று நான் கெஜ்ரிவாலிடம் கேட்கிறேன். ஆம் ஆத்மியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. இதனால் ஜந்தர் மந்திர் பகுதியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
source maalaimalar