சென்னையில் இந்தியா– இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை, ஜன. 27–
இந்தியா– இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழக– இலங்கை மீனவர்களிடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகவே உள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக தமிழக – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
என்றாலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து சேதப்படுத்திய சம்பவமும் நடைபெற்றது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை, இன்று காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் அமைந்துள்ள மீன் வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கியது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட 17–க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் சுசித்ரா துரை, துணை செயலாளர் மயங்க் ஜோஷி, இலங்கை இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ் தர்ஷன்சிங் ஆகியோர் பங் கேற்றனர்.
இலங்கை அரசு சார்பில் இலங்கை நாட்டு மீன் வளம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குனர் நிமல் ஹெட்டிய ராச்சி மற்றும் அதிகாரிகள் இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது பாக் ஜலசந்தி பகுதியில் இருநாட்டு மீனவர்களும் நல்லிணக்கத்துடன் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமை. இந்திய– இலங்கை பேச்சுவார்த்தையின்போது ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது போன்றவற்றை கைவிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்கள் சார்பில் அவர்கள் தரப்பு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இரு தரப்பு கோரிக்கைகளின் சாதக பாதகம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று தமிழக– இலங்கை மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
source maalaimalar