நேபாளத்தில் சுஷில் கொய்ராலா புதிய பிரதமராகிறார்
காத்மாண்டு, ஜன. 27–
நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு கடந்த 2008–ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜன நாயக ஆட்சி மலர்ந்தது.
அப்போது மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். பிரசாந்தா பிரதமரானார். ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி ஏற்ற சில மாதங்களில் அவர் பதவி விலகினார்.
அதன் பின்னர் பலர் பிரதமர் பதவி வகித்தனர். நிலையில்லாத ஆட்சியால் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அங்கு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் நேபாள காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து நேபாள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. அதில் முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவும், சுஷில் கொய்ராலாவும் போட்டியிட்டனர்.
அதில் 16 ஓட்டுகள் கூடுதலாக பெற்று சுஷில் கொய்ராலா வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து நேபாளத்தின் புதிய பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.
சுஷில் கொய்ராலாவுக்கு 71 வயதாகிறது. திருமணமாகாத பிரமச்சாரியான இவர் மறைந்த முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் உறவினர் ஆவார்.
source maalaimalar