காஞ்சீபுரம், பிப். 9–
காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், அதன் நிர்வாக இயக்குனர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அதிக அளவில் விற்பனையாகும் ரகங்கள் குறித்தும், இருப்பு விபரம் குறித்தும் கேட்டு அறிந்த அவர் பின்னர் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம், அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் விற்பனை மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் நெசவாளர்களின் இல்லங்களுக்கு சென்று பட்டு சேலைகள் உற்பத்தி செய்யும் இடங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தற்பொழுது தனியாருக்கு சவால் விடும் வகையில் கோ–ஆப்டெக்சில் புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மாதம்தோறும் பணம் செலுத்தி 10–ம் மாத முடிவில் புதிய ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் இல்லாத அளவு கோ–ஆப்டெக்சின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு, மக்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் பிரசித்திபெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள், அஜந்தா – எல்லோரா சிற்பங்கள் போன்றவற்றை ஆடைகளில் பதித்து ‘சரித்ரா’ என்ற பெயரில் சோதனை முறையில் விற்பனை செய்த போது அதனை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் அதிக அளவிலான விற்பனை நடக்கும் வகையில் விரைவில் ‘சூப்பர் 1000’ என்ற திட்டத்தின் மூலம் ஆயிரம் புதிய டிசைன்களில் ஆடைகளை கோ–ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
சமீபத்தில் கோ–ஆப்டெக்ஸ் அறிவித்த வேட்டி தினம் மூலம், வேட்டிகள் விற்பனை அதிகரித்ததோடு அரசு அலுவலர்கள் மட்டுமின்றி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது.
தற்பொழுது சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஏறத்தாழ 6 மாதம் 1 வருடங்களுக்கு முன்பே அதற்கான பணிகளை தொடங்கி வருகிறார்கள். எனவே, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கோ–ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, கோ–ஆப்டெக்ஸ் மாநில துணைத் தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் வள்ளி நாயகம், செல்வராஜ், துணை தலைவர் விஸ்வநாதன், கூட்டுறவு துறை தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் முருகானந்தம் உடனிருந்தனர்.
source maalaimalar