Home
» news
» வாஜ்பாயிடம் பழகியது போன்ற வாய்ப்பு உருவானால் மோடியையும் கருணாநிதிக்கு பிடிக்கும்: வானதி சீனிவாசன்
வாஜ்பாயிடம் பழகியது போன்ற வாய்ப்பு உருவானால் மோடியையும் கருணாநிதிக்கு பிடிக்கும்: வானதி சீனிவாசன்
ஈரோடு, பிப். 15–
பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பூரண மதுவிலக்கினை கொண்டு வந்தால் பொருளாதாரம் மேம்படும். சமூகம் பாதுகாக்கப்படும். மதுவினால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்.
நரேந்திரமோடி முதல்–மந்திரி ஆன பின்னால் குஜராத் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்பற்றாக்குறை நிலவிய குஜராத் தற்போது 16 மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும்தான் காவல்துறையில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். அங்குள்ள சிறுபான்மை மக்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.
வாஜ்பாய் சிறந்த தலைவர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னதை வரவேற்கிறோம். வாஜ்பாயின் பா.ஜ.க. வேறு, மோடியின் பா.ஜ.க. வேறு என்று கருணாநிதி கூறியுள்ளார். வாஜ்பாயுடன் பழகியது போல நரேந்திரமோடியுடன் பழகும் வாய்ப்பு உருவானால் மோடியையும் கருணாநிதிக்கு பிடிக்கும். பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி காணாமல் போகும். 3–வது அணியில் இருக்கும் கட்சிகளால் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாது. நரேந்திரமோடி நாட்டின் பிரதமர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை தாமரை திடலில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு பூரண மதுவிலக்கினை வலியுறுத்தி தாலிகாக்கும் தாமரை போராட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய மகளிரணி தலைவர் சரோஜ் பாண்டே, மாநில மகளிரணி தலைவி தமிழரசி யோகம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
source maalaimalar