கொடைக்கானலில் நிலவும் கடும் குளிர்: அறைகளில் பயணிகள் முடக்கம்
கொடைக்கானல், ஜன.31–
கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் உறைபனி நிலவியது.
தற்போது நீர்பனி காணப்படுகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 22 டிகிரியும், குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அளவுக்கு அதிகமாக கடும் குளிர் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. பகல் நேரத்தில் வெப்பம் நிலவினாலும் மரத்தின் நிழலில் ஒதுங்கும்போது குளிர் அடிக்கிறது.
மாறுபட்ட பருவ சூழ்நிலை காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். கொடைக் கானலில் உள்ள இயற்கை அழகை ரசிப்பதற்காக வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடும் குளிர் காரணமாக தங்கள் விடுதி அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
வானிலை அதிகாரிகள் கூறும்போது, கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் அடுத்தவாரம் மேலும் அதிகரிக்கும் என கூறினர்.
source maalaimalar
