ஆஸ்திரேலிய ஓபன் நாளை தொடக்கம்: நடால் பட்டம் வெல்வாரா?
மெல்போர்ன், ஜன. 12–
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26–ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆண்டி முர்ரே (இங்கிலாந்து) டேவிட் பெரர் (ஸ்பெயின்) போன்ற முன்னணி வீரர்கள் இடையே பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது.
நடால் கடந்த ஆண்டு 2 கிராண்ட்சிலாம் (பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஒபன்) பட்டங்களை வென்றார். ஆபரேசனுக்கு பிறகு அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. கடந்த முறை அவர் ஆஸ்திரேலியா ஒபனில் காயத்தால் ஆடவில்லை. 2009–ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அவர் 2–வது முறையாக அந்த பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
நடால் இதுவரை 13 கிராண்ட்சிலாம் பட்டம் (ஆஸ்திரேலிய ஓபன் 1, பிரெஞ்சு ஓபன் 8, விம்பிள்டன் 2, அமெரிக்கா ஓபன் 2) பெற்றுள்ளார். 14–வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்ல அவர் போராட வேண்டும்.
‘நம்பர் 2’ வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 2008, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்று இருந்தார்.
4–ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே 3 முறை இறுதிப்போட்டியில் (2010, 2011, 2013) தோற்று பட்டத்தை இழந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல் முறையாக வெல்லும் முயற்சியில் அவர் உள்ளார்.
6–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 17 கிராணட்சிலாம் பட்டம் வென்ற சாதனை வீரர் ஆவார். 2012–ம் ஆண்டு விம்பிள்டனுக்கு பிறகு அவர் பட்டம் வென்றது இல்லை. அரை இறுதி வரை நுழைவது அவருக்கு சவாலானது.
பெண்கள் பிரிவில் நம்பர் ஓன் இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) நடப்பு சாம்பியன் விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), 3–ம் நிலை வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷியா) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அசரென்கா ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை தொடர்ந்து 3–வது முறையாக வெல்லும் நிலையில் உள்ளார்.
செரீனா வில்லியம்ஸ் 17 கிராண்ட்சிலாம் பட்டம் (ஆஸ்திரேலிய ஓபன் 5, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 5, அமெரிக்க ஓபன் 5) வென்றுள்ளார். 18–வது பட்டத்துக்காக காத்திருக்கிறார்.
source maalaimalar