Home
» news
» பாராளுமன்றத்துக்குள் நுழையும் எம்.பி.க்களை பரிசோதித்து அனுமதிக்க ஏற்பாடு: திங்கட்கிழமை முடிவு
பாராளுமன்றத்துக்குள் நுழையும் எம்.பி.க்களை பரிசோதித்து அனுமதிக்க ஏற்பாடு: திங்கட்கிழமை முடிவு
புதுடெல்லி, பிப். 15–
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ராயலசீமா பகுதி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது ஆந்திரா மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் மிளகு பொடி ‘ஸ்பிரே’ அடித்தார். இதனால் பல எம்.பி.க்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.பி.ஒருவர் கத்தியை வைத்திருந்ததாக கூறப்பட்டது.
மக்கள் பிரதி நிதிகளான எம்.பி.க்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், பாராளுமன்றம் வரும் எம்.பி.க்களிடம் போலீசார் சோதனை செய்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த வியாழக்கிழமை ஆந்திர எம்.பிக்கள் மிளகு பொடி, கத்தி போன்றவற்றை அவைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமை சீர் குலைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் மரபு சிதைக்கப்படுகிறது. எம்.பி.க்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் கூறினார்.
வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் பாராளுமன்ற கூட்டத்தின் போது நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தினார். இதற்காக பாராளுமன்ற பாதுகாப்பு குழு எம்.பி.க்களின் அவசர கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டம் வருகிற 17–ந் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்கு பா.ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற பாதுகாப்பு எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவருமான கரிய முண்டா தலைமை தாங்குகிறார்.
இதில், பாராளுமன்றத்திக்குள் நுழையும் எம்.பிக்களை சோதனை செய்த பிறகு சபைக்குள் அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, ஆபத்து விளைவிக்கும் பொருட்களை சபைக்குள் கொண்டு செல்ல தடை விதிப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை முடிவு எடுக்கப்படுகிறது.
source maalaimalar