சண்டிகார், ஜன. 12–
முன்னாள் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலர் ஆம் ஆத்மியில் சேர்ந்து வருகிறார்கள். தற்போது அரியானா மாநில போலீஸ் ஐ.ஜி. ரன்பீர் சர்மா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 56 வயதாகும் இவர் சமீபத்தில் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
அவருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட இருந்தது. அதற்கு முன்பே அவர் பணியில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து அரசியலில் குதித்தார்.
இவரது மாமனார் ஐ.டி. சர்மா பாரதீய ஜனதாவில் உள்ளார். முன்னாள் மத்திய மந்திரியான இவர் 3 முறை எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கட்சியில் சேர்வது பற்றி ஐ.ஜி. சர்மா கூறுகையில், ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலுடன் எனக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருந்து வருகிறது. அவர் அடிக்கடி சாதாரண மக்களைப் பற்றித்தான் பேசுவார். இப்போது சாதாரண மனிதன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளார். அவரது ஊழல் எதிர்ப்பு கொள்கை தான் ஆட்சியைப் பிடிக்க உதவியது’’ என்றார்.
source maalaimalar