புதுடெல்லி, ஜன. 12–
பாராளுமன்றத்துக்கு மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகின்றன. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இதே போல் காங்கிரசும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க திட்ட மிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் புதிதாக உதயமான ஆம் ஆத்மி கட்சி இமாலய வளர்ச்சி அடைந்து ஆட்சியை பிடித்தது. அந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இது காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் பெரிய சவாலாக உருவெடுத் துள்ளது. ஆம் ஆத்மியில் சேர நடுநிலையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்ததன் மூலம் அந்த இரு கட்சிகளுக்கும் இடையே எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டது. அதே சமயம் பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
நாடு முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு நரேந்திரமோடி பிரசாரத்தால் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாரதீய ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு மொத்தமாக பாரதீய ஜனதாவுக்கு செல்ல விடாமல் ஆம் ஆத்மி கட்சி பிரித்து விடும் என்றும் இதனால் பாரதீய ஊனதாவின் வெற்றி வாய்ப்பு சரியும் நிலை ஏற்படும் என்று கருதுகிறது.
சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலும் ஆம் ஆத்மியின் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியை பாரதீய ஜனதா எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அந்த கட்சி நமது ஓட்டுக்களைத்தான் தின்றுவிடும். எனவே ஆம் ஆத்மிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அரசு அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியை கண்டித்து பாரதீய ஜனதா போராட்டம் நடத்தியது.
மேலும் ஆம் ஆத்மி பக்கம் இளைஞர்கள், இளம் பெண்கள் சேராமல் இருக்க அவர்களை கவரும் வகையில் பாரதீய ஜனதா புதிய வியூகம் வகுத்து வருகிறது.
அலுவலகங்களில் பணி புரிவோருக்கு வருமானவரி உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்புகளால் சுமை ஏற்படுகிறது. இவற்றை ரத்து செய்து விட்டு ஒரே சீரான முறையில் வரி விதிப்புகள் இருக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அலுவலகங்களில் பணி புரியும் நடுத்தர வர்க்கத் தினரை கவரலாம் என்று பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.
இதே போல் பெண்களை கவரும் வகையில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும் பாரதீய ஜனதா ஆலோசித்து வருகிறது. சமீபத்தில் சர்வதேச அமைப்பு ஒன்று இந்தியாவில் 12 சதவீத பெண்களே ‘சானிட்டரி நாப்கின்’ பயன்படுத்து கிறார்கள். மற்றவர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தது. பாரதீய ஜனதா இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு வருகிற 2025–ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 50 சதவீதம் பெண்கள் ‘சானிட்டரி நாப்கின்’ பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவர யோசித்து வருகிறது.
இதே போல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களை ஊக்கப்படுத் தவும் முடிவு செய்து உள்ளது. பெண்கள் பயன்படுத்த ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கும் ஒரு கழிவறை, 10–ம் வகுப்பிலேயே வாகனம் ஓட்டுவது பற்றிய பாடம் கொண்டுவருவது, பெண் களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவையும் கொண்டு வரப்படுகிறது.
இவைகள் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இது பெண்களை கவரும் வகையில் இருக்கும் என்று பாரதீய ஜனதா தலைவர் ஒருவர் கூறினார்.
பாரதீய ஜனதாவைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் இளைஞர்களை கவரும் வகையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ராகுல்காந்தி தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று அவர் பெங்களூர் அரண்மனை திடலில் மாணவர்கள் பிரதிநிதிகளை சந்தித்தார். நாடு முழுவதும் இருந்து 250 இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் போட்டு அவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசாமல் அனைவரையும் சுற்றிலும் உட்கார வைத்து ராகுல்காந்தி சற்றி வந்து ஒவ்வொருவரது கருத்துக்களையும் கேட்டார். மக்கள் என்ன நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும். தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று கருத்து கேட்டார்.
ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு அதற்கான பதில்களையும் ராகுல்காந்தி பெற்றார். பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கருத்து கேட்கிறார். இறுதியாக அவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.
கலந்துரையாடலின் போது இளைஞர்களுக்கு அதிக அளவில் தொழில் பயிற்சி மையங்களை தொடங்க வேண்டும், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், விவசாய திட்டங்கள், கிராமப்புற மாணவர்களுக்கான திட்டங்கள், கிராமங்களில் வீடு தோறும் கழிவறை திட்டங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டனர். அவற்றை ராகுல் காந்தி உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டார். எனவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை வரும் வகையில் புதுமையான அதிரடி திட்டங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
source maalaimalar