கேரளாவில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை
திருவனந்தபுரம், பிப். 15–
பாராளுமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சி பணிகள், தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்க நேற்று லட்சத்தீவுக்கு சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கொச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை கேரள மாநில காங்கிரசார் மாநில தலைவர் சுதீரன் தலைமையில் வரவேற்றனர்.
இதில் மூத்த நிர்வாகிகள், முன்னாள் தலைவரும், உள்துறை மந்திரியுமான ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 10 நிமிடங்கள் மட்டுமே கேரள நிர்வாகிகளுடன் பேசிய சோனியாகாந்தி அங்கிருந்து உடனடியாக லட்சத்தீவு புறப்பட்டுச்சென்றார்.
நேற்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலையில் அவர், மீண்டும் கேரளா வந்தார். இன்று பிற்பகல் கொல்லத்தில் நடைபெறும் கட்சியின் தொழிற்சங்க மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
பின்னர் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு அவர், கொல்லம் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.
சோனியாகாந்தி வருகையை யொட்டி கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொச்சி விமான நிலையத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
source maalaimalar