2 மெட்ரோ ரெயில்கள் கப்பலில் இன்று சென்னை வருகை
சென்னை, ஜன.26-
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை- சென்னை விமான நிலையம் மற்றும் சென்டிரல்- பரங்கிமலை இடையே மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக ரூ.1,471.3 கோடி மதிப்பில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் தயாரிக்க பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரெயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 9 ரெயில்களுக்கான 36 பெட்டிகள் பிரேசில் நாட்டில் தயாரித்து அனுப்பவும், மீதம் உள்ள ரெயில்கள் ஆந்திர மாநிலம் தடா ஸ்ரீ சிட்டியில் தயாரித்து அனுப்புவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தற்போது 3 ரெயில்களுக்கான 12 பெட்டிகள் பிரேசில் நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் பணிமனையில் கொண்டு செல்லப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 4 மற்றும் 5-வது ரெயில்கள் பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் இன்று இரவு 10 மணிக்கு சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு சூரினஸ் கப்பலில் மெட்ரோ ரெயிலை கொண்டு வரும் மார்க்கன்ஸ் கப்பல் சேவை நிறுவனத்தின் சென்னை அதிகாரி பிரேம்குமார் கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சரக்குகளை பாதுகாப்பான முறையில் இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் இருந்து பி.பி.சி.எவரெஸ்ட் கப்பல் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 2 ரெயில்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தற்போது சூரினஸ் கப்பல் மூலம் 312 டன் எடைக்கொண்ட 2 ரெயில்களுக்கான 8 பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
துறைமுகத்தில் இந்த கப்பல் 3 அல்லது 4-வது டெக்கில் நிறுத்தப்பட்டு நாளை (திங்கட்கிழமை) காலை ராட்சத கிரைன் மூலம் 2 ரெயில்களும் கப்பலில் இருந்து இறக்கப்படுகிறது. தொடர்ந்து சுங்கவரி சோதனைக்கு பின்னர் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் ரெயில்கள் ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
பிரேசில் நாட்டிலிருந்து ஏற்கனவே 3 ரெயில்கள் சென்னைக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இன்று 2 ரெயில்கள் கப்பலில் வருகிறது. இவை சுங்கவரி சோதனைக்கு பின்னர் ராட்சத லாரிகளில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்த ரெயில்களோடு மொத்தம் 5 ரெயில்கள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஓரிரு நாட்களில் ஆந்திர மாநிலம் தடா சிட்டியிலிருந்து ஒரு ரெயில் லாரியில் கொண்டுவரப்பட உள்ளது. இதனால் கோயம்பேடு பணிமனை வழக்கத்தைவிட பரபரப்பான ஒரு ரெயில் பணிமனையாக மாற உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
source maalaimalar
