ஒருநாள் போட்டி விதியை மாற்ற வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்
சென்னை, பிப். 12–
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த அக்டோபர் 1–ந்தேதி முதல் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிப்படி 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முனையில் இருந்து ஒவ்வொரு புதிய பந்து வீசப்படுகின்றன.
இதேபோல பவர் பிளேயில் பீல்டிங் கட்டுப்பாடு இருந்தது. எல்லை கோட்டு பகுதியில் 4 வீரர்கள் தான் இருக்க வேண்டும். முந்தைய விதிப்படி 5 வீரர்கள் எல்லை கோட்டு பகுதியில் இருக்கலாம்.
இந்த விதியால் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பவுலர்கள் 300 ரன்னுக்கு மேல் கொடுக்க வேண்டி உள்ளது. 2 புதிய பந்தால் சுழற்பந்து வீரர்களால் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.
இதனால் இந்த புதிய விதிமுறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 2015–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஒருநாள் ஆட்டத்துக்கான விதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) கூட்டம் ஜூன் மாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டி விதியை மாற்ற வலியுறுத்தும். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போதைய புதிய விதியை வரவேற்று உள்ளன.
source maalaimalar
