Home
» politics
» பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ‘ஆம் ஆத்மி’ வியூகம்: 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்ப்பு
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ‘ஆம் ஆத்மி’ வியூகம்: 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்ப்பு
புதுடெல்லி, ஜன. 5–
டெல்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி ஆலோசிக்க டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுவது என்பது பற்றி நிர்வாகிகள் விவாதித்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் நிருபர்களிடம் பேசுகையில் "ஆம் ஆத்மி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவாலை முன் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வழி நடத்தும் தகுதி அவருக்கு இருக்கிறது" என்றார்.
இதையடுத்து கெஜ்ரிவால் தான் பிரதமர் வேட்பாளர் என்ற தகவல் பரவியது. ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில் இந்த தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்தார்.
அவர் கூறுகையில், "பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். என் மீதுள்ள பாசத்தில் யோகேந்திரயாதவ் அப்படி கூறிவிட்டார். யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல, பண வீக்கத்தில் இருந்தும், ஊழலில் இருந்தும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக எவ்வளவு தொகுதிகளில் போட்டியிட முடியுமோ, அவ்வளவு தொகுதிகளில் போட்டியிட கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குறைந்த பட்சம் 300 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
ஆம் ஆத்மியின் முதல் வேட்பாளர் பட்டியல் வரும் 15–ந்தேதி முதல் 20–ந்தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2–வது வாரத்துக்குள் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு விடுவார்கள்.
பிப்ரவரி 3–வது வாரம் முதல் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுவதால் இடையில் உள்ள 3 மாதங்களுக்குள் நாடு முழுவதும் ‘ஆம் ஆத்மி’ கட்சி வலுவாக காலூன்றி விட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கருதுகிறார். இதன் முதல் கட்டமாக வரும் 10-ம் தேதி முதல் நாடு தழுவிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்களை நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, புது டெல்லியில் இன்று பேட்டியளித்த
ஆம் ஆத்மி கட்சியின் துவக்க கால தலைவர்களில் ஒருவரான யோகேந்திரா யாதவ் கூறியதாவது:-
எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று நாட்டு மக்களிடையே மிகுந்த அர்வமும், ஆவலும் மேலோங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ‘மெய்ன் பி ஆம் ஆத்மி’ (நானும் கூட ஆம் ஆத்மி) என்ற பெயரில் வரும் 10-ம் தேதி முதல் நாடு தழுவிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களை சந்திக்கும் எங்கள் கட்சி தொண்டர்கள் புதிய தேசத்தை உருவாக்க ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள். உறுப்பினர்களாக சேர்பவர்களிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
source maalaimalar
