திருவனந்தபுரம், ஜன.5–
பிரதமர் மன்மோகன்சிங் கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
கேரள வந்துள்ள மன்மோகன்சிங்கை கவுரவிக்கும் வகையில் கேரள மாநில சிறப்பு மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மன்மோகன் சிங்கிடம் கேரள மாநில அரசு சார்பில் 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை உம்மன்சாண்டி வழங்கினார். தற்போது கேரளாவில் பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு திட்டம் தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கை பற்றியும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சுற்றுச்சூழல் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிந்ததில் உள்ள தவறுகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9–ல் இருந்து 12–ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த மனுவில் வற்புறுத்தப்பட்டு இருந்தது. இந்த பிரச்சினைகளை கவனமுடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் நேற்று கேரள அரசின் மின்அணு எழுத்து அறிவு திட்டம் தொடக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு கார் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் சென்று கொண்டு இருந்தார். அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது திடீரென்று பிரதமரின் வாகன அணி வகுப்பில் பாரதீய ஜனதா தொண்டர்கள் நுழைந்தனர்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். இது தொடர்பாக 5 பாரதீய ஜனதா தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
source maalaimalar
