உத்தரபிரதேசம் வளர்ச்சி அடையவில்லையா?: மோடி குற்றச்சாட்டுக்கு அகிலேஷ்யாதவ் பதிலடி
புதுடெல்லி, ஜன.26–
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் அகிலேஷ்யாதவ் ஆட்சி பற்றி சரமாரியாக புகார் கூறினார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தொழில் மற்றும் அனைத்து துறையிலும் பின்தங்கி விட்டது என்றார். பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தால் குஜராத் போல் உத்தரபிரதேசமும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழும் என்றார்.
அவருக்கு முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
உத்தரபிரதேச மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்று சிலர் (மோடி) இங்கு பேசிவிட்டு போனார்கள். அவர்கள் உத்தரபிரதேசம் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசுகிறார்கள். குற்றச்சாட்டுகளை கூறும் முன் புள்ளி விவரங்களை சரியாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
அவர்களுக்கு உத்தரபிரதேசம் பற்றி எதுவும் தெரியவில்லை. நாட்டிலேயே பால் மற்றும் கோதுமை உற்பத்தியில் உத்தரபிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. குஜராத்தில்தான் எரிவாயு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
கடந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியால்தான் உத்தரபிரதேசத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சீர் செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
source maalaimalar
