பழனி, பிப்.11–
பழனியை சேர்ந்தவர் சுகுமார் போஸ். இவர் பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். தற்போது இவர் கி.பி. 13–ம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த நாணயத்தை கண்டெடுத்து உள்ளார்.
இந்த நாணயத்தை பழனி தொல்லியல்துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
கி.பி. 13–ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் மன்னர் பழனியை ஆட்சி செய்து உள்ளார். சுகுமார் போஸ் கண்டெடுத்த இந்த நாணயம் சுந்தரபாண்டியன் ஆட்சியில் பயன்படுத்திய பழமையான அரிய நாணயம்.
இந்த நாணயம் முழுக்க முழுக்க பித்தளையில் செய்யப்பட்டு உள்ளது. நாணயத்தின் முகப்பில் சுந்தரன் என்ற பெயர் 2 வரிகளில் மடக்கி எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் பாண்டியப்பேரரசின் அரசு முத்திரையான இணைகயல்செண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாணயத்தின் எடை 800 மில்லி கிராம் உள்ளது. நாணயத்தின் குறுக்கு விட்டம், 15 மில்லி மீட்டராக உள்ளது.பழனியை கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களும் மாறி மாறி ஆட்சி செய்து உள்ளனர். அதனால் பழனி சுற்று வட்டார பகுதியில் சுந்தரபாண்டிய மன்னனின் கல்வெட்டு அதிக அளவு கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது முதல் முறையாக சுந்தரபாண்டியன் ஆட்சி கால நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இது 13–ம் நூற்றாண்டு மக்களை பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
source maalaimalar
