அவதூறு பேச்சு: விஜயகாந்த் மீதான வழக்கு மறுபரிசீலனை செய்ய போடி நீதிபதி உத்தரவு
போடி, பிப்.14–
தேனி மாவட்டம் போடி சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். அ.தி.மு.க-வை சேர்ந்த இவர் சார்பில் போடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வக்கீல் ராதா கிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் தனிநபர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் 2.2.2014–ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எரஞ்சியில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் அக்கட்சித்தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அருட்செல்வம், பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், காவல் துறை தலைவரையும் அவதூறாக பேசியதாகவும், இதனால் மனுதாரர் முருகேசன் மனதளவில் பாதிக்கப்பட்டு விரக்தி அடைந்துள்ளார்.
எனவே விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த 10–ந் தேதி போடி நீதித்துறை நடுவர் கே.எஸ்.திருமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளதா? மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு செய்ய 13–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்று காலை நீதித்துறை நடுவர் திருமணி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தே.மு.தி.க. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் தே.மு.தி.க. மாநாடு நடைபெற்ற இடம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எரஞ்சி என்ற இடமாகும்.
ஆனால் புகார் மனுதாரர் வசிக்கும் இடத்திற்கும் மாநாடு நடந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. எனவே மனுதாரர் முருகேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் மீதான வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் என கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
source maalaimalar
