டெல்லியில் 18–ந்தேதி சந்திப்பு: மம்தாவுக்கு ஆதரவாக அன்னாஹசாரே பிரசாரம்
கொல்கத்தா, பிப். 14–
சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் கெஜ்ரிவால் அன்னாஹசாரேயிடம் இருந்து பிரிந்து சென்று ஆம்ஆத்மி கட்சி தொடங்கினார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மறுத்த அன்னஹசாரே பிறகு அவர் முதல்–மந்திரி ஆன பிறகும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியை அன்னா ஹசாரே புகழ்ந்து பேசினார். அரசியலில் நேர்மையானவர். ஊழலை வேரோடு ஒழித்துக் கட்டியவர் என்று அன்னாஹசாரே பாராட்டினார்.
அவரது பாராட்டு திரிணாமுல் காங்கிரசுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. இதையடுத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ரெயில் மந்திரியுமான முகுல்ராய் மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்துக்கு சென்றார். அங்கு அவர் அன்னாஹசாரேயை சந்தித்துப் பேசினார்.
பின்னர் முகுல்ராய் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜியின் 17 அம்ச பொருளாதார சீர்திருத்த திட்டத்தை அன்னா ஹாசரே வெகுவாக பாராட்டினார்.
இதையடுத்து மம்தா பானர்ஜியை ஆதரித்து நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
முன்னதாக வருகிற 18–ந் தேதி மம்தா பானர்ஜியும், அன்னாஹசாரேயும் சந்தித்துப் பேசுகிறார்கள். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் முகுல்ராய் கூறினார்.
source maalaimalar
