சென்னை, பிப். 12–
வடசென்னையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகேயும், ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகேயும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி சார்பில் பாலம் கட்ட கடந்த 2009–ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இதில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே ரூ.23 கோடி செலவில் 4 வழிபாதையாக உயர்மட்ட மேம்பாலமும், ஸ்டான்லி அருகே எம்.சி.சாலையில் ரூ.10.56 கோடி செலவில் சுரங்கப்பாதையும் கட்டப்பட்டு வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.
இந்த 2 திட்டங்களையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதே போல் அண்ணாநகர் மண்டலம் ஷெனாய் நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.18.05 கோடி செலவில் புதிதாக நவீன கலையரங்கமும் கட்டப்பட்டு இருந்தது.
இந்த கலையரங்கத்தையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த கலையரங்கம் சென்னை மாநகராடசியின் 2–வது கலையரங்கம் ஆகும். 61 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அடித்தளம் வாகன நிறுத்தும் இடமாகவும், தரை தளம் கலையரங்கமாகவும், முதல் தளம் பல்நோக்கு கட்டிடமாகவும் கட்டப்பட்டு உள்ளது.
கலையரங்கத்தில் 900 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கலையரங்கம் முழுவதும் ஏ.சி. வசதி உள்ளது. ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் இன்று முதல் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டங்களையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் மதுரை மாநகராட்சியில் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம், போளூர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அலுவலக கட்டிடம், துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் உபரி எரிவாயு கூடங்கள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கூடலூர் (தேனி) நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்புகள், மேட்டுப்பாளையம், வேட்டைக்காரன் புதூர் மற்றும் மேலசொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் தேவக்கோட்டை நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாக ஆணையரகம், திருச்சி மாநகராட்சிக்கான இணையதள நுழைவு, குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு நோயை கண்காணிக்க பொறியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்களுக்கு 30 கையடக்க கணினி வழங்குதல், 92 துப்புரவு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், பேரூராட்சிகளில் புதிய அலுவலக கட்டிடம், சுகாதார வளாகம், வணிக வளாகம், குடிநீர் அபிவிருத்தி பூங்கா மற்றும் நவீன எரிவாயு தகன மேடை ஆகிய திட்டப்பணிகளையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு துறை செயலாளர் பணீந்திரரெட்டி பங்கேற்றனர்.
source maalaimalar
