பாராளுமன்ற தேர்தல்: காங். வேட்பாளர் முதல் பட்டியல் நாளை வெளியாகிறது
புதுடெல்லி, பிப். 12–
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. காங்கிரஸ் பிரசார குழு தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பணிகளை முன் நின்று கவனித்து வருகிறார்.
தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணியில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநில வாரியாக முக்கிய தொகுதிகளுக்கு உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாளை முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நாளை நடக்கிறது.
கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார். அதன் பிறகு முதலாவது பட்டியலை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்து வருகிறார். வேட்பாளர் பட்டியலை யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெற்றி வாய்ப்பு அடிப்படையில் தயாரித்து வருகிறார்.
எனவே வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல் கட்டமாக நாளை கவுகாத்தி, கொல்கத்தா வடக்கு உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவுகாத்தி தொகுதிக்கு 15 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் ஒருவர் அறி விக்கப்படுகிறார். கொல்கத்தா வடக்கு தொகுதியில் சோமேந்திர நாத் மித்ராவுக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கூடாரத்தில் தெரி விக்கப்படுகிறது.
நாளை ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் ஆகிய 7 மாநிலங்களுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்கள்.
source maalaimalar
