சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற ராஜ் தாக்கரே கைது
மும்பை, பிப். 12–
மராட்டிய மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட காலமாக வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் சுங்கவரி வசூலை நிறுத்தக் கோரியும் ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மான் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் சுங்கவரி கொடுக்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீவைத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் இது தொடர்பாக ராஜ் தாக்கரே மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மும்பை புறநகர்ப் பகுதியான வாஷி– புனே இடையே உள்ள சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக ராஜ் தாக்கரே அறிவித்து இருந்தார்.
இதற்காக ராஜ் தாக்கரே இன்று காலை தொண்டர்களுடன் புறப்பட்டார். ஏராளமான வாகனங்களில் அணி வகுத்துச் சென்றனர். செம்பூரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராஜ் தாக்கரேயையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான உள்ளூர் போலீசாரும் ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
source maalaimalar
