ஐ.பி.எல். சூதாட்டம்: டோனி-ரெய்னாவின் தொடர்பை அம்பலமாக்கிய சென்னை புரோக்கர்கள்
சென்னை, பிப். 12–
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் கடந்த ஆண்டு மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லியில் சூதாட்ட தரகர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தி நடிகர் விண்டு தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினரான குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முகுல் முட்கல், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிவேதத்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுப்ரீம் கோர்ட்டில் 170 பக்க அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குருநாத் மெய்யப்பனுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சென்னையில் பிடிபட்ட உத்தம் ஜெயின் என்ற சிட்டி, பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் அப்போது அம்பலத்துக்கு வரவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த தகவல்களையெல்லாம் மூடி மறைத்து விட்டனர். அப்போது கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த சம்பத் குமார் தான் (தற்போது திருச்சி ரெயில்வே சூப்பிரண்டு) சூதாட்ட புரோக்கரிடம் முதலில் விசாரணை நடத்தினார். அப்போது கிரிக்கெட் வீரர்கள் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக உத்தம் ஜெயின் கூறியிருக்கிறார். இந்த விவகாரங்கள் எல்லாம் சுப்ரீம் கோர்ட்டில் சூதாட்டம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே வெளியாகி யிருக்கிறது.
சென்னையில் பிடிபட்ட புரோக்கரான உத்தம் ஜெயின், கூறிய தகவல்கள் எல்லாம், 10 மாதங்களுக்கு பின்னர் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, உத்தம் ஜெயின், ஏராளமான தகவல்களை கூறியுள்ளார். அந்த விஷயங்களை தெரிந்து வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கேட்ட போது யாரும் தாக்கல் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புரோக்கர்கள் கைதான போது, இங்குள்ளவர்களுக்கும், டெல்லியில் பிடிபட்டவர்களுக்கும் தொடர்பு இல்லை என சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறிய நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை மூலமாக சென்னை புரோக்கர்களின் சர்வதேச சூதாட்ட தொடர்பு அம்பலமாகியிருக்கிறது. இது சி.பி.சி.சி.ஐ.டி போலீசாரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
source maalaimalar
