புதுடெல்லி, பிப். 12–
தெலுங்கானா, மீனவர்கள் பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தில் 6–வது நாளாக இன்று கூச்சல் அமளி நிலவியது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5–ந்தேதி தொடங்கியது. இதில் தெலுங்கானா மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலும் மேல்– சபையிலும் போராட்டம் நடத்தியதால் கடந்த 5 நாட்களாக அமளி ஏற்பட்டு சபை முடங்கியது.
இன்று காலை பாராளு மன்றம் கூடியதும் 6–வது நாளாக தெலுங்கானா பிரச்சினையும், தமிழக மீனவர்கள் பிரச்சினையும் தலை தூக்கியது. சபையில் கூச்சல் – அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு மீண்டும் சபை கூடியதும் ரெயில்வே மந்திரி மல்லி கார்ஜுன கார்கே எழுந்து ரெயில்வேயின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். அவரை பட்ஜெட் தாக்கல் செய்ய விடாமல் ஆந்திர எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
கடும் கூச்சல் அமளிக்கிடையே மல்லிகார்ஜுன கார்கே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அவரது உரை கேட்க முடியாத அளவுக்கு அமளியாக இருந்தது. தொடர்ந்து அவர் படித்துக் கொண்டே இருந்ததால் எம்.பி.க்கள் பட்ஜெட்டை கிழித்து அவர் மீது வீசினார்கள்.
இந்த போராட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சீமாந்திரா பகுதி மத்திய மந்திரிகளான கே.எஸ்.ராவ், புரந்தேஸ்வரி, சிரஞ்சீவி, சூரிய பிரகாஷ் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷம் போட்டனர்.
அவர்கள் பாராளுமன்றத்தின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜெகநாத்தும், தெலுங்கு தேசம் எம்.பி. சிவபிரசாத்தும் ஒருவரை யொருவர் நோக்கி வேகமாக பாய்ந்து வந்தனர். கை கலப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற எம்.பி.க்கள் அதை தடுத்து விட்டனர்.
4 மத்திய மந்திரிகள் கோஷம் எழுப்பியபோது பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் சபையில் இருந்தனர். சோனியா எம்.பி.க்களையும், 4 மத்திய மந்திரிகளையும் சமரசப்படுத்த முயன்றார். ஆனால் யாரும் கேட்கவில்லை. மன் மோகன்சிங் சமரச முயற்சியும் பலிக்கவில்லை.
பட்ஜெட்டை வாசிக்க முடியாத அளவுக்கு அமளி நீடித்ததால் மல்லிகார்ஜுன கார்கே பாதி பட்ஜெட் வாசித்து முடித்த நிலையில் மீதிப் பகுதியை வாசித்ததாக கருதிக் கொள்ளுமாறு கூறி உரையை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மேல்–சபையும் ஒத்திவைக்கப்பட்டது.
source maalaimalar
